இருதரப்பினர் தகராறு; 5 பேர் கைது
நாங்குநேரி அருகே இருதரப்பினர் தகராறு காரணமாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாங்குநேரி:
நாங்குநேரி அருகே உள்ள தென்னிமலையைச் சேர்ந்த சுரேஷ் மற்றும் சுடலைகண்ணு ஆகியோர் தனது நண்பர்களுடன் திருக்குறுங்குடி நம்பி ஆற்றில் குளிக்கச் சென்றனர். அங்கு அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்து கொண்டு சம்பவத்தன்று சுடலைகண்ணு வீட்டின் இரும்பு கேட்டை சேதப்படுத்தி மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சுரேஷ் வீட்டின் கதவை சேதப்படுத்தியுள்ளனர். அப்போது சுரேஷ் வீட்டில் இல்லை. தாய் கல்யாணி வீட்டில் இருந்துள்ளார். இதுகுறித்து இருதரப்பினரும் நாங்குநேரி போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். சப்-இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுரேஷ் (24), சுப்பையா (23), சுடலைகண்ணு (23) ஆகியோரையும் மற்றும் மற்றொரு தரப்பை சேர்ந்த சுடலைகண்ணு (24), மாரியப்பன் (26) ஆகியோரையும் கைது செய்தார். மற்றொருவவரை போலீசார் தேடி வருகின்றனர்.