வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் கைது
வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளத்தில் வதந்தி பரப்பிய பீகார் வாலிபரை திருப்பூர் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருப்பூர்,
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற ஒரு போலியான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது வடமாநில தொழிலாளர்கள் இடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், இந்த பிரச்சினை பீகார் சட்டமன்றம் வரை எதிரொலித்தது.
இந்த நிலையில், வதந்தி பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திருப்பூரில் மாநகர சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் வதந்தி பரப்பப்பட்ட சமூக வலைதளங்களை தீவிரமாக கண்காணித்தனர்.
பீகார் வாலிபர்
இதில் பிரசாந்த்குமார் (வயது 32) என்ற பீகாரைச் சேர்ந்த வாலிபர் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்று போலியான வீடியோவை தயார் செய்து முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்தது தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து இவர் மீது கடந்த 8-ந் தேதி திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில், பிரசாந்த்குமார் பீகார் மாநிலம் பக்ஹாரி பாரதி பகுதியை சேர்ந்தவர் என்பதும், தற்போது ஜார்கண்ட் மாநிலத்தில் ரெயில்வேயில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது.
ஜார்கண்டில் கைது
இதையடுத்து ஜார்கண்ட் மாநிலம் விரைந்த தனிப்படை போலீசார், லேட்டஹர் மாவட்டம், ஹெகிகாரா என்ற கிராமத்தில் வைத்து பிரசாந்த்குமாரை கைது செய்தனர்.
பின்னர் பிரசாந்த்குமாரை திருப்பூருக்கு அழைத்து வந்த தனிப்படை போலீசார் திருப்பூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.