வாகன நிறுத்தம், நுழைவு கட்டணம் வசூலிக்க ரூ.41½ லட்சத்துக்கு ஏலம்
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வாகன நிறுத்தம் மற்றும் நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமை ரூ.41½ லட்சத்துக்கு ஏலம் போனது.
திருவட்டார்:
மாத்தூர் தொட்டிப்பாலத்தில் வாகன நிறுத்தம் மற்றும் நுழைவு கட்டணம் வசூல் செய்யும் உரிமை ரூ.41½ லட்சத்துக்கு ஏலம் போனது.
மாத்தூர் தொட்டிப்பாலம்
மாத்தூர் தொட்டிப்பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரிய தொட்டிப்பாலமாகும். மலைப்பாங்கான காடுகளாக இருந்த மாத்தூர் பகுதியில் உள்ள கணியான்பாறை- கூட்டுவாவுப்பாறை என்ற இரு மலைகளை இணைத்து பரளியாற்று தண்ணீரைக் கொண்டு செல்வதற்காக கட்டப்பட்டுள்ளது. 1240 அடி நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் காமராஜர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது.
குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த தொட்டிப்பாலத்தை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
அருவிக்கரை ஊராட்சியில் இதன் முகப்பு பகுதி உள்ளதால் ஊராட்சிக்கு வருமானம் தரும் ஒன்றாக தொட்டிப்பாலம் உள்ளது. ஆண்டு தோறும் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு கட்டணம் மற்றும் வாகன நிறுத்த கட்டணங்கள் வசூலிப்பது ஆகியவை ஏல முறையில் நடத்தப்படுகிறது.
ரூ.41½ லட்சத்துக்கு...
கடந்த ஆண்டுக்கான குத்தகை வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைவதால் 2023-ம் ஆண்டுக்கான ஏலம் நேற்று அருவிக்கரை ஊராட்சி அலுவலகத்தில் தலைவர் சலேட் ஜாண் கிறிஸ்டோபர் தலைமையில் நடந்தது. திருவட்டார் வட்டார துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜசேகர், அருவிக்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ஜாண் கிறிஸ்டோபர், ஊராட்சி செயலாளர் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஏலத்தில் 30 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் வாகனம் நிறுத்தம் இடத்தில் வசூல் செய்யும் உரிமை ரூ.23 லட்சத்து 65 ஆயித்து 900-க்கும், நுழைவுக்கட்டணம், வீடியோ, கேமரா கட்டணம் ரூ.17 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் என மொத்தம் ரூ.41½ லட்சத்து 900-க்கு ஏலம் போனது.
பயணிகள் வருகை அதிகரிப்பு
கடந்த ஆண்டு இவை அனைத்தும் சேர்த்து மொத்தம் ரூ.17 லட்சத்துக்கு ஏலம் போனது. ஆனால் இந்த ஆண்டு இரண்டரை மடங்கு உயர்ந்து அதிக தொகைக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஊராட்சி தலைவி சலேட் ஜாண் கிறிஸ்டோபர் கூறுகையில், மாத்தூர் தொட்டிப்பாலத்துக்கு ஆண்டு தோறும் வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சுற்றுலா பயணிகளுக்காக கூடுதல் வசதிகள் மேற்கொண்டு வருகிறோம்.
கடந்த ஆண்டை விட கூடுதல் தொகைக்கு தொட்டிப்பாலம் நுழைவுக்கட்டணம் மற்றும் வாகனம் நிறுத்தும் கட்டணம் ஏலம் போயுள்ளது. இந்த பணத்தில் பெரும்பாலானவை தொட்டிப் பாலம் மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும். தொட்டிப்பாலத்தின் மேல் சென்று சுற்றிப்பார்த்து வர ரூ.5-ம், கீழ் பகுதியில் நிறுத்தப்படும் மோட்டார் சைக்கிளுக்கு ரூ.5, ஆட்டோவுக்கு ரூ.15, கார்களுக்கு ரூ.40, மினி வேன், வேன்களுக்கு ரூ.50, பஸ்களுக்கு ரூ.75, வீடியோ கேமராவுக்கு ரூ.25, புகைப்பட கேமராவுக்கு ரூ5 என கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று கூறினார்.