வாடிக்கையாளருக்கு ஏலச்சீட்டு தொகை-இழப்பீடு வழங்க உத்தரவு


வாடிக்கையாளருக்கு ஏலச்சீட்டு தொகை-இழப்பீடு வழங்க உத்தரவு
x

வாடிக்கையாளருக்கு ஏலச்சீட்டு தொகை-இழப்பீடு வழங்க நிறுவனத்திற்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் ஓட்டல் நடத்தி வருபவர் வளவன்(வயது 58). இவர் ஜெயங்கொண்டத்தில் ஏலச்சீட்டு நடத்தி வரும் ஜெயப்பிரியா சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் 40 மாத கால தவணை கொண்ட ரூ.20 லட்சத்திற்கான சீட்டில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். இந்த சீட்டின் 6-வது மாதத்தில் வளவன் ஏலம் எடுத்துள்ளார். இதன்படி சீட்டு நடத்தும் நிறுவனம், அவருக்கு ரூ.12 லட்சம் கொடுக்க வேண்டும். ஆனால் சுமார் நான்கு மாதம் தாமதம் செய்து 3 தவணைகளில் ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்தை சீட்டு நிறுவனம் அவருக்கு வழங்கியுள்ளது. மீதித்தொகை ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை சீட்டு நிறுவனம் தராததால், அவர் அத்தொகையை கேட்டு அரியலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, அந்த நிறுவனம் சார்பில் இந்த வழக்கில் பதில் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி ராமராஜ் மற்றும் உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று அளித்த தீர்ப்பில், அந்த நிறுவனம், வாடிக்கையாளருக்கு சீட்டு எடுத்த வகையில் தர வேண்டிய ரூ.3 லட்சத்து 10 ஆயிரத்தை சீட்டு ஏலம் விட்ட நாளில் இருந்து வட்டியுடன் சேர்த்து நான்கு வாரங்களுக்குள் தர வேண்டும். சேவை குறைபாட்டிற்காக அவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் நிதி நிறுவனங்கள் பணம் வழங்கும்போது ஏற்படுத்தக்கூடிய ஆவணங்களுக்கு கட்டணம் மற்றும் சேவை வரி கட்டணம் என்பவை சரியான விகிதாச்சாரத்தில் வெளிப்படைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story