பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி


பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி
x

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் பெரம்பலூரில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்ட சைக்கிள் போட்டியில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்

கலெக்டர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை நினைவு கூரும் வகையில், பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி நேற்று காலை நடந்தது. பெரம்பலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் முன்பு உள்ள சாலையில் இருந்து புறப்பட்ட இந்த சைக்கிள் போட்டியை மாவட்ட கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரத்திற்கும், 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரத்திற்கும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சைக்கிள் மிதித்தனர்.

முதல் 3 இடங்களை பிடித்தவர்கள்

10 கிலோ மீட்டர் தூரத்திற்கான சைக்கிள் போட்டி பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 15 கிலோ மீட்டர் சைக்கிள் போட்டி பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகம் வரை சென்று மீண்டும் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், 20 கிலோ மீட்டர் தூரத்திற்கான சைக்கிள் போட்டி குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் நிறைவடைந்தது. போட்டியில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதல் இடத்தை லிங்கேசும், 2-ம் இடத்தை ஜானேசும், 3-ம் இடத்தை நதினும், மாணவிகள் பிரிவில் முதலிடத்தை மிஸ்திகாவும், 2-ம் இடத்தை தன்யாயும், 3-ம் இடத்தை வந்தனாவும் பிடித்தனர். 15 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடத்தை தீனாவும், 2-ம் இடத்தை சந்தோசும், 3-ம் இடத்தை தமிழரசனும், மாணவிகள் பிரிவில் முதலிடத்தை திவ்யாவும், 2-ம் இடத்தை ஓவியாவும், 3-ம் இடத்தை சத்யாவும் பிடித்தனர். 17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் முதலிடத்தை பாலமுருகனும், 2-ம் இடத்தை அகிலாவும், 3-ம் இடத்தை சிவாவும், மாணவிகள் பிரிவில் முதலிடத்தை ஹர்ஷினியும், 2-ம் இடத்தை சுபத்ராவும், 3-ம் இடத்தை கவுல்சியாவும் பிடித்தனர்.

பரிசு தொகை

சைக்கிள் போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 2-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும், 3-ம் இடத்தை பிடித்தவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா ரூ.250-ம் அவரவர் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கான காசோலைகளையும் மற்றும் சான்றிதழையும் மாவட்ட கலெக்டர் கற்பகம் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், பெரம்பலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story