பூம்புகார் சுனாமி குடியிருப்பை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி
பூம்புகார் சுனாமி குடியிருப்பை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி
பூம்புகார் சுனாமி குடியிருப்பை சூழ்ந்த மழைநீரை அகற்றும் பணி நடந்தது. இந்த பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி ஆய்வு செய்தார்.
வயல்களில் வெள்ளநீர் புகுந்தது
கடந்த 29-ந்தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. சீர்காழி பகுதியில் 22 சென்டிமீட்டர் அளவிற்கு மழைப்பொழிவு பதிவானது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கரில் சம்பா சாகுபடி செய்திருந்த நெல் வயல்களில் வெள்ள நீர் புகுந்தது. இதன் காரணமாக நெற்பயிரில் தண்ணீர் தேங்கி இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். மேலும் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்ததால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கடல் சீற்றம் காணப்படுவதால், கடலோரங்களில் அமைந்துள்ள ஆறுகளின் வழியாக கடல் நீர் விளை நிலங்களில் புகுந்துள்ளது.
ஆய்வு
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சீர்காழி பகுதியில் நேற்று மயிலாடுதுறை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழ்நாடு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனருமான அமுதவல்லி பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். பூம்புகார் மீனவர் சுனாமி குடியிருப்பில் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். கன மழையின் காரணமாக சுனாமி நகர் பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து பொதுப்பணித்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை பொக்்லின் எந்திரம் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை பார்வையிட்ட அவர், அந்த பகுதி மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது கிராம பொறுப்பாளர்கள் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
நிவாரணம் வழங்க வேண்டும்
அதனை தொடர்ந்து ராதாநல்லூர், சன்னாஓடை, ஆலங்காடு, நெய்தவாசல் கீழையூர் மற்றும் சின்ன பெருந்தோட்டம் ஆகிய பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை பார்வையிட்டார். அப்போது அவரிடம் விவசாயிகள் உரிய கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். தமிழக அரசுக்கு பாதிப்புகள் குறித்து தெரிவிக்கப்படும் என அவர் கூறினார். ஆலங்காடு பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே உடைப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் லலிதா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, வேளாண்மை இணை இயக்குனர் சேகர், உதவி இயக்குனர் ராஜராஜன், சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், ஒன்றிய ஆணையர் இளங்கோவன், காவிரிப்பூம்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சசிகுமார், ஒன்றிய கவுன்சிலர் மதுமிதா ரவி ஆகியோர் உடன் இருந்தனர்.