கோவில்பட்டி சிந்தாமணி நகரில் ரூ.14 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட பூமிபூஜை
கோவில்பட்டி சிந்தாமணி நகரில் ரூ.14 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்ட பூமிபூஜை நடந்தது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி சிந்தாமணி நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை கட்டும் பணிக்கு நேற்று பூமிபூஜை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய கட்டிடப் பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இலுப்பையூரணி பஞ்சாயத்து தலைவர் செல்வி சந்தனம், அ.தி.மு.க. நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன், நகர அவை தலைவர் அப்பாசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர் கூறுகையில், மாமன்னன் திரைப்படத்தில் ஜாதி மோதலை உருவாக்கும் கருத்துக்கள் இருந்தால் படக்குழு அதனை உடனடியாக நீக்க வேண்டும். அதற்காக தேவர்மகன் திரைப்படத்தை ஒப்பிடக்கூடாது. அந்த திரைப்படம் வெளியான போது பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும் மக்களிடம் வரவேற்பை பெற்றது. மேலும் அந்த திரைப்படம் ஜனரஞ்சகமான படமாக அமைந்தது. ஜாதி மோதல்களை ஊக்குவிப்பர்கள் யாராக இருந்தாலும் கண்டிக்கத்தக்கது.
அத்தகைய கருத்துகள் இருப்பதால் தான் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன.
அவ்வாறு இருந்தால் படக்குழு ஆராய்ந்து அதனை நீக்க வேண்டும் இதற்காக வெளியான பழைய படங்களை ஒப்பிட்டு பேசுவது தீர்வாகாது. அ.தி.மு.க. பா.ஜ.க. கூட்டணியில் தான் தொடர்கிறது. சிறந்த பிரதமர் நரேந்திர மோடி தான் என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருக்கிறோம்.
முரண்பாடுகள் எதுவாக இருந்தாலும் அது குறித்து பா.ஜ.க. தலைமை சொன்னால் மட்டும் தான் சரியான கருத்தாக இருக்கும்' என்றார்.