வாராப்பூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை
வாராப்பூர் ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் சமுதாயக்கூடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சி, குரும்பலூர் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன் தலைமை தாங்கினார். கிராம பொதுமக்கள் முன்னிலை வகித்தனர். இந்த சமுதாயக்கூட கட்டிடம் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட உள்ளது.
இதில் மூன்றில் ஒரு பாகமாக ரூ.8 லட்சத்து 33 ஆயிரத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன் ஆகியோர் தங்களது சொந்த நிதி வழங்கி உள்ளனர். மேலும் வாராப்பூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பல்வேறு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் தனது சொந்த செலவில் குரும்பலூர் கிராமத்தில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் பகுதிநேர ரேஷன் கடை கட்டிடம், சடையம்பட்டி கிராமத்தில் 2, குரும்பலூர் கிராமத்தில் 4, வாராப்பூர் கிராமத்தில் 1 என மொத்தம் 7 குளியல் தொட்டிகள் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் தனது சொந்த செலவில் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கியுள்ளார்.
அரசு வழங்கும் உதவியோடும் தனது சொந்த செலவில் மக்கள் பணியாற்றி வரும் ஊராட்சி தலைவர் மலர்விழி நாகராஜன் ஊராட்சி முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரித்தல், தெருவிளக்கு, குடிநீர் வசதி, தனிநபர் இல்ல கழிப்பறை, சுகாதார மேம்பாடு என அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் நிறைவேற்றித்தருகிறார். இந்த பூமி பூஜையில் ஊராட்சி துணைத்தலைவர் சித்ரா சுப்பையா, ஊராட்சி செயலர் வெள்ளைச்சாமி உள்பட கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.