பாரதீய ஜனதா கட்சியினர் மறியல்;150 பேர் கைது


பாரதீய ஜனதா கட்சியினர் மறியல்;150 பேர் கைது
x

கோவில் நிலத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினர் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

கின்னஸ் சாதனை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டையில் திருவேங்கடநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட 117 ஏக்கர் நிலத்தில், கின்னஸ் சாதனைக்காக 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்து கின்னஸ் சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். கோவில் நிலத்தில் மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு பாரதீய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாரதீய ஜனதா ஆர்ப்பாட்டம்

இதனைக்கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.ேக.பழனிசாமி தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாவட்ட தலைவர் பழனி கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், ஜெயராமன், ராமசாமி, மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன், மாவட்ட துணை தலைவர்கள் ரவிச்சந்திரன், செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது 6 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்த அமைச்சர் அர.சக்கரபாணியை கண்டித்தும், கோவில் நிலத்தை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

150 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தின் முடிவில், பாரதீய ஜனதா கட்சியினர் திடீரென திண்டுக்கல்-பழனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சியினரை குண்டு கட்டாக தூக்கி வாகனங்களில் ஏற்றினர்.

அதன்படி 150 பேரை கைது செய்த போலீசார், அவர்களை ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். பாரதீய ஜனதா கட்சியினரின் மறியலால் ஒட்டன்சத்திரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story