பவானி ஆற்றில் நிகழும் உயிரிழப்புகள் குறித்து பாக்யராஜ் வெளியிட்ட வீடியோ - மறுப்பு தெரிவித்த காவல்துறை
பவானி ஆற்றில் நீரில் மூழ்கி அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் தற்செயலானது அல்ல என பாக்யராஜ் தெரிவித்திருந்தார்.
கோவை,
இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தனது 'எக்ஸ்' தளத்தில் 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பவானி ஆற்றில் நீரில் மூழ்கி அடிக்கடி ஏற்படும் உயிரிழப்புகள் தற்செயலானது அல்ல என்றும், தண்ணீரில் மூழ்கி நீராடும் நபர்களை சில மர்ம நபர்கள் நீருக்குள் இழுத்து கொடூரமாக கொலை செய்வதாகவும், பின்னர் அவர்களின் உடல்களை தேடுவதற்காக பணம் கேட்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாக்யராஜின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை தமிழ்நாடு உண்மை கண்டறிதல் குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி இதுவரை பவானி ஆற்றுப்பகுதியில் இது போன்ற கொலை சம்பவங்கள் எதுவும் நடந்ததாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் எந்த வழக்கும் பதிவாகவில்லை என்றும், பத்ரகாளியம்மன் கோவில் அருகே உள்ள ஆற்றில் 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ம் ஆண்டு பவானி ஆற்றில் எதிர்பாராத வகையில் விபத்து ஏற்பட்டு 20 பேர் உயிரிழந்ததாகவும், அதன்பின் 10 காவலர்களை உள்ளடக்கிய, ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையிலான 'மேட்டுப்பாளையம் உயிர் காக்கும் காவல் படை' கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, பவானி ஆற்றில் தற்செயலாக மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2023-ல் 6 ஆக குறைந்ததாகவும், 2024-ல் தற்போது வரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து பரவும் வதந்திகள் ஆதாரமற்றவை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.