வேங்கைவயல் விவகாரம்: சிபிஐ விசாரணை தேவையில்லை - ஒரு நபர் ஆணைய தலைவர் பேட்டி
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என்று ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியிலன மக்கள் வசிக்கும் பகுதிக்கான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த சம்பவம் கடந்த டிச. 6ஆம் தேதி தெரியவந்தது. தொடக்கத்தில் வெள்ளனூர் போலீஸார் விசாரித்து வந்த வழக்கு. சிபிசிஐடி போலீஸாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
வேங்கைவயல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரிய பொது நல வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஓய்வுபெற்ற நீதிபதி எம். சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இது குறித்து ஒரு நபர் ஆணைய தலைவர் நீதியரசர் சத்தியநாராயணன் புதுக்கோட்டையில் இன்று செய்தியார்களிடம் தெரிவித்ததாவது:
வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையில்லை என நினைக்கிறேன். சிபிசிஐடியின் விசாரணை சரியானபாதையில் சென்று கொண்டிருக்கின்றது.
அறிவியல்பூர்வமான சான்றுகளின் அடிப்படையில் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதுவரை 158 பேரிடம் விசாரித்துள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது. டி.என்.ஏ. சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்த 8 பேரும் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.