'இழிச்செயல்களைச் சாதிப் பெருமையென நம்புவது இழிவான பித்துக்குளித்தனம்' - திருமாவளவன்
வன்கொடுமைகளை வீரதீர செயல்களாகக் கர்வம் கொள்வது மனநோய் அவலத்தின் உச்சம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மணிப்பூரில் 2 பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடூரத்திற்குப் பலரும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், வன்கொடுமைகளை வீரதீர செயல்களாகக் கர்வம் கொள்வது மனநோய் அவலத்தின் உச்சம் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"இம்மண்ணில் தலித்துகளுக்கும், பழங்குடிகளுக்கும் எதிராகக் காலம் காலமாகத் தலைமுறை தலைமுறையாக இத்தகைய கேவலமான ஒடுக்குமுறைகள் தொடர்கின்றன. இந்த இழிச்செயல்களை தங்களின் சாதிப் பெருமைகளென இவர்கள் நம்புவதுதான் இழிவினும் இழிவான பித்துக்குளித்தனமாகும்.
அப்பாவிகளை வதைத்துப் படுகொலை செய்வது, வாயில் மலம் திணிப்பது, சிறுநீர் கழிப்பது, குடிசைகளைக் கொளுத்துவது, உடைமைகளைச் சேதப்படுத்துவது, பெண்களை அம்மணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச்செல்வது, கூட்டுப் பாலியல் வல்லுறவு கொள்வது, கொள்ளையடிப்பது, ஆணவக் கொலைகள் செய்வது என விவரிக்க இயலாத வன்கொடுமைகளைச் செய்து அவற்றை வீரதீர செயல்களெனப் போலியாய்க் கர்வம் கொள்வதுதான் இவர்களின் மரபணுக்களில் கொட்டமடிக்கும் மனநோய் அவலத்தின் உச்சமாகும்."
இவ்வாறு திருமாவளவன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.