உரிமம் இன்றி இயங்கிய மாட்டிறைச்சி கடைக்கு 'சீல்'


உரிமம் இன்றி இயங்கிய மாட்டிறைச்சி கடைக்கு சீல்
x
தினத்தந்தி 7 Oct 2023 12:15 AM IST (Updated: 7 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் உரிமம் இன்றி இயங்கிய மாட்டிறைச்சி கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் தலைமையில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-2 உணவு பாதுகாப்பு அலுவலர் காளிமுத்து உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், தூத்துக்குடி மாநகராட்சி ஜார்ஜ் ரோடு பகுதியில் உள்ள மாட்டிறைச்சி கடையை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடைக்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாதது கண்டறியப்பட்டது. மேலும் அந்த கடையில் சுமார் 100 கிலோ பழைய மாட்டிறைச்சி, எலும்புகளை உறைய வைத்து, உறைபனி பெட்டியின் வெப்பநிலை முறையாக கண்காணிக்கப்படாமல் இருந்ததையும், சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கொழுப்பு உள்ளிட்ட சுமார் 50 கிலோ மாட்டிறைச்சியையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் வைக்கப்பட்டு இருந்த 150 கிலோ மாட்டிறைச்சியையும் பறிமுதல் செய்து மாநகராட்சி குப்பைக்கிடங்கில் கொட்டி, பினாயில் ஊற்றி புதைத்து அழிக்கப்பட்டது.

மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெறும் வரை, அந்த இறைச்சிக்கடையில் இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்பதற்காகவும், இறைச்சிக்கழிவு அகற்றுதலில் உள்ள சந்தேகத்திற்கிடமான செயல்கள் குறித்தும் விசாரணை செய்ய ஏதுவாக, அந்த மாட்டிறைச்சி கடை மூடி 'சீல்' வைக்கப்பட்டது. இதேபோன்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் இயங்கிய பிரியாணி கடையும் மூடப்பட்டது.

அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றால் மட்டும் போதாது. உணவு வணிக வளாகத்தை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story