கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் தயார்


கொரோனா சிகிச்சைக்கு படுக்கைகள் தயார்
x

கொரோனா சிகிச்சைக்கு பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பெரம்பலூர்

ஒத்திகை நிகழ்ச்சி

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு அரசு வழங்கியுள்ள விதிமுறைகளை பின்பற்றி சிகிச்சை அளிப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இதையொட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் மற்றும் நாடி துடிப்பு, மூச்சு விடும் தன்மை, ரத்த கொதிப்பு, உடல் வெப்பநிலை போன்ற பல்வேறு முதற்கட்ட சிகிச்சைகள் மேற்கொண்ட பிறகு நோயாளி சமநிலை கணக்கில் கொண்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்பின் அவர் கூறியதாவது:-

மருத்துவ உபகரணங்கள்

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி, அவசர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் 18 படுக்கைகளும், குழந்தைகளுக்கான கொரோனா தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 8 படுக்கைகளும், பெரியவர்களுக்கு 8 படுக்கைகளும், உள் நோயாளிகள் பிரிவில் 30 படுக்கைகளும், அவசர கால தேவையின் போது கூடுதலாக 250 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

மேலும் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு (குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்) மற்றும் உள்நோயாளிகள் பிரிவுகளில் கொரோனா சிகிச்சைக்கு தேவையான மருந்து பொருட்களின் இருப்பு, ஆக்சிஜன் அளவு, மருத்துவ உபகரணங்கள் மற்றும் போதுமான மருத்துவ பணியாளர்கள் பணியில் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியின்போது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அர்ஜுன், இருக்கை மருத்துவர்கள் சரவணன், அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story