கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் கரடி உலா
கோத்தகிரியில் குடியிருப்பு பகுதியில் கரடி உலா
கோத்தகிரி
கோத்தகிரி நகரின் மையப் பகுதிகளான பஸ்நிலையம், கடைவீதி, காம்பாய் கடை, மாதா கோவில் சாலை, கார்சிலி, கன்னிகா தேவி காலனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக கரடிகள் தொடர்ந்து நடமாடி வருகின்றன. இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை 3 மணிக்கு பகல் நேரத்தில் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே உள்ள புனித லூக்கா ஆலயம் அருகே சுமார் 200 குடும்பங்கள் வசித்து வரும் பகுதியில் கரடி ஒன்று சாலையில் சாவகாசமாக நடந்து சென்று கொண்டிருந்தது. கரடியைக் கண்டு வளர்ப்பு நாய்களுக்கு குறைத்தபடி துரத்தி சென்றன. கரடி, நாய்களை எதிர்த்து நின்றதோடு, அருகில் இருந்த தடுப்புச் சுவர் மீது லாவகமாக ஏறி ஆலய வளாகத்திற்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சியை அப்பகுதியில் உள்ள சிலர் வீட்டில் இருந்தவாறே ெசல்போனில் படம் எடுத்து சமூக வலைதளங்களில் பத்திவிட்டனர். இந்த வீடியோ வெளியானதையடுத்து அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் கரடி பொதுமக்களை தாக்கி அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படும் முன் கரடியை கூண்டு வைத்துப் பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.