தமிழ் பேசும் சமூகத்தில் பிறந்ததை எண்ணி பெருமைப்பட வேண்டும்கலெக்டர் கார்மேகம் பேச்சு


தமிழ் பேசும் சமூகத்தில் பிறந்ததை எண்ணி பெருமைப்பட வேண்டும்கலெக்டர் கார்மேகம் பேச்சு
x

தமிழ் பேசும் சமூகத்தில் பிறந்ததை எண்ணி பெருமைப்பட வேண்டும் என்று தமிழ் கனவு நிகழ்ச்சியில் கலெக்டர் கார்மேகம் பேசினார்.

சேலம்

சேலம்

தமிழ் கனவு நிகழ்ச்சி

சேலம் மாவட்டத்தில் மாபெரும் தமிழ் கனவு, தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி மாசிநாயக்கன்பட்டி நோட்டர் டேம் ஆப் ஹோலி கிராஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில், இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் கற்க… கற்க என்ற தலைப்பிலும், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், விடுதலை போரின் முதல் முழக்கம் என்ற தலைப்பிலும் பேசினார்கள்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தை சார்ந்த 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

நமக்கான அடையாளம்

உலகத்தில் இருக்கும் மனித இனத்திற்கு அடையாளமாக இருக்க கூடியது மொழி. ஒரே ஒரு மொழி மட்டும் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய அதே மொழி, இன்றும் சமகால மக்களால் பேசப்படுகிறது என்றால் அது தமிழ் மட்டுமே. மற்ற மொழிகள் எல்லாம் அதுபோல் அல்ல,

நாம் தமிழ் பேசும் சமூகத்தில் பிறந்ததை எண்ணி பெருமைப்பட வேண்டும். மொழி வரலாற்றிலேயே இலக்கியத்தையும், அறிவியலையும் கொண்ட மொழி தமிழ் ஆகும். நம்முடைய அடையாளங்கள், நம்முடைய உரிமைகள், நாம் பெற்ற வரலாறுகளை நமக்கு நினைவுட்டும் நிகழ்ச்சியாக "மாபெரும் தமிழ் கனவு" நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

நோக்கம்

மொழி நமக்கான அடையாளம் மற்றும் முகவரியை கொடுத்துக் கொண்டே இருக்கும். வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கே சென்றாலும் நம்முடைய மொழி நம்முடைய பண்பாடு, நம்மை பிரகடனபடுத்திக் கொண்டே இருக்கும். சமத்துவத்தையும், அமைதியையும் வழங்குவதே கல்வியின் உயர்ந்த நோக்கமாகும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி, மாபெரும் தமிழ்க்கனவு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர் சரவணன், மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் சிவக்குமார், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணி, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story