உழவு பணிக்கு வந்த 7 டிராக்டர்களில் பேட்டரி திருட்டு


உழவு பணிக்கு வந்த 7 டிராக்டர்களில் பேட்டரி திருட்டு
x
தினத்தந்தி 11 July 2023 1:58 AM IST (Updated: 11 July 2023 4:56 PM IST)
t-max-icont-min-icon

உழவு பணிக்கு வந்த 7 டிராக்டர்களில் பேட்டரி திருடப்பட்டுள்ளதாக கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்

உழவு பணிக்கு வந்த 7 டிராக்டர்களில் பேட்டரி திருடப்பட்டுள்ளதாக கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.

விவசாயிகள் மனு

காவிரி டெல்டா விவசாயிகள் சங்க தலைவர் ரவிச்சந்தர் தலைமையில் விவசாயிகள் சிலர் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ராவிடம் புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில், தஞ்சையை அடுத்த திருவையாறு அருகே அம்மையகரம், வரகூர், அம்பது மேல் நகரம் உள்ளிட்ட பகுதிகளில் உழவு பணியை முடித்துவிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிராக்டர்களில் உள்ள பேட்டரி, மின் மோட்டார், கேபிள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.

வரகூரில் 4 பேட்டரிகள், அம்பது மேல் நகரத்தில் 1 பேட்டரி, அம்மையாகரம் கிராமத்தில் 2 பேட்டரி என மொத்தம் 7 பேட்டரிகள் திருடப்பட்டு உள்ளன. இதேபோல் திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் மின் மோட்டாரில் உள்ள காப்பர் வயர்கள் திருடப்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் போலீசாரிடம் புகார் குறித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தொடரும் திருட்டில் ஈடுபடும் மர்மநபர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

மகன்களுடன் வந்த கிராமிய பாடகி

தஞ்சை வல்லம் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வி (வயது38). கிராமிய பாடகி. இவர் நேற்று தனது 2 மகன்களை பள்ளி சீருடையுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தார். பின்னர் அவர் கூடுதல் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 20 ஆண்டுகளாக தமிழகஅரசு நடத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் விழிப்புணர்வு கிராமிய பாடல்களை பாடி வருகிறேன். நான் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறேன். எனக்கு விலையில்லா வீட்டு மனை பட்டா வழங்க கோரி கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மனு கொடுத்தேன். அது பரிசீலனைக்கு எடுக்கப்பட்டு தாசில்தார் அலுவலகத்தில் இருந்து எனக்கு கடிதம் வந்தது.

உடனே அங்கு சென்று விசாரித்தபோது செந்தமிழ் நகர் திட்டத்தில் வீட்டு மனை பட்டா வழங்குவதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். சில நாட்கள் கழித்து மீண்டும் வீட்டு மனை பட்டா குறித்து கேட்க சென்றபோது தங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தெரிவித்தனர். வீட்டு வாடகை கொடுக்க வழியில்லாமல் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளேன். எனக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா ஒதுக்கி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பாசிமணி விற்க அனுமதி

சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஜெயபால், துணைச் செயலாளர் அன்பு ஆகியோர் தலைமையில் நரிக்குறவர் இனத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில், தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் ஆரம்ப காலத்தில் இருந்தே நரிக்குறவர் சமூகத்தை சார்ந்த பழங்குடியின மக்கள் பிழைப்பிற்காக ஊசி மணி, பாசிமணிகளை பொது மக்களிடம் விற்று வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.

இந்த வருமானத்தை நம்பி 25-க்கும் அதிகமான குடும்பத்தினர் உள்ளனர். தற்போது பழைய பஸ் நிலையத்தில் நாங்கள் ஊசிமணி, பாசிமணி விற்கக்கூடாது என கூறி பொருட்களை சேதப்படுத்துவது, விரட்டி அடிப்பது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே இது குறித்து மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை மேற்கொண்டு நரிக்குறவர் சமூக மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story