சோழர்கள் வெற்றி சின்னமாக கட்டிய பாசியம்மன் கோவில்


சோழர்கள் வெற்றி சின்னமாக கட்டிய பாசியம்மன் கோவில்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தொண்டி அருகே வெற்றிச் சின்னமாக சோழர்களால் கட்டப்பட்ட பாசியம்மன் கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது

ராமநாதபுரம்

தொண்டி

தொண்டி அருகே வெற்றிச் சின்னமாக சோழர்களால் கட்டப்பட்ட பாசியம்மன் கோவிலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

பாசியம்மன் கோவில்

ராமநாதபுரம் மாவட்டத்தில், ஓடைகள், ஆறுகள் கடலில் கலக்கும் இடங்களில் உப்பங்கழிகள் மூலம் பல இயற்கை துறைமுகங்கள் உருவாகி உள்ளன. அவ்வாறான ஒரு இயற்கை துறைமுகமாக தொண்டி அருகில் உள்ள பாசிப்பட்டினம் கி.பி.875 முதல் கி.பி.1090 வரையிலான காலத்தில் இருந்துள்ளது. பாசியாற்றின் கரையில் உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இவ்வூர் கடற்கரை அருகில் பிற்கால சோழர்களால் கட்டப்பட்ட பாசியம்மன் கோவில் உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம், முன் மண்டபம், பலிபீடம் என்ற அமைப்பில் உள்ள இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கிலும் ஒரு வாசல் உள்ளது.

கல்வெட்டு

இதுபற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கூறியதாவது:-

இந்த கோவில் விமானம் வண்டிக்கூடு போன்ற அமைப்பில் சாலை விமானமாக அமைந்துள்ளது. விமானத்தின் அதிஷ்டானம் ஜகதி, முப்பட்டைக்குமுதம், கண்டம், பட்டிகை என பாதபந்த அதிஷ்டானமாக அமைந்துள்ளது. அடுத்து வேதிகையும், இதன் மேல் அமைந்த பாதசுவரில் கோட்டபஞ்சரங்களும், அரைத்தூண்களும், தேவகோட்டங்களும் காணப்படுகின்றன. முழுவதும் கருங்கற்களாலும், அதற்கு மேல் தளம் செங்கல், சுண்ணாம்பு கொண்டும் கட்டப்பட்டுள்ளன.

மதுரையை ஆண்டு கொண்டிருந்த பராக்கிரமபாண்டியனுக்கும், திருநெல்வேலியை ஆண்டுகொண்டிருந்த குலசேகர பாண்டியனுக்கும் மதுரையை ஆட்சி செய்வதில் நடந்த போரின்போது, கி.பி.1168-ல் பராக்கிரமபாண்டியன் மகன் வீரபாண்டியனுக்கு ஆதரவாக வந்த இலங்கை பராக்கிரமபாகுவின் படையும், குலசேகரப் பாண்டியனுக்கு ஆதரவாக வந்த இரண்டாம் ராஜாதிராஜ சோழன் படையும் தொண்டி பாசிபட்டினத்தில் போரிட்டதாக கல்வெட்டு தெரிவிக்கிறது. இப்போரில் சோழர் தோற்றனர். பின்பு நடந்த போர்களில் சிங்களப்படையை சோழர் வென்றனர்.

சீரமைக்க வேண்டும்

சோழநாட்டின் எல்லையான சுந்தரபாண்டியன்பட்டினம் முதல் தேவிபட்டினம் வரையிலான பாண்டிய நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் முதலாம் ராஜராஜசோழன் காலம் முதல் சோழர்களின் ஆதிக்கம் இருந்துள்ளது. இப்பகுதிகளில் சோழநாட்டு வீரர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். பாசிப்பட்டினத்தில், தங்கள் வெற்றியின் அடையாளமாக எட்டுக்கைகளுடன் அமர்ந்த நிலையில் பாசியம்மனுக்கு ஒரு கோவிலை சோழர்கள் கட்டி உள்ளனர்.

850 ஆண்டுகள் பழமையான இக்கோவிலின் மேற்பகுதியில் மரங்கள் வளர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இதை புனரமைத்து பாதுகாக்க தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story