அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்


அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரியபெருமானூர் கிராமம், சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம் கிடங்குடையான்பட்டு, ரிஷிவந்தியம் ஒன்றியம் பழையசிறுவங்கூர் ஆகிய கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் சார்பில் மியாவாக்கி திட்டத்தின்கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

அடிப்படை வசதிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதிரி கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு அனைத்து கிராமப்புறங்களுக்கும் தேவைப்படும் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், மின் விளக்குகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் மேற்கொள்ள ஊரக வளர்ச்சித்துறை மூலம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீர்நிலைகளை மேம்படுத்தும் விதமாக உறிஞ்சுக்குட்டை அமைத்தல், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், தூர் வாருதல், புதிய நீர்நிலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி அரியபெருமானூர், கிடங்குடையாம்பட்டு, பழையசிறுவங்கூர் ஆகிய ஊராட்சிகளில் மரம் நடுதல் மற்றும் பழையசிறுவங்கூர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளங்களை தூர் வாரும் பணி, அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் புதியதாக குளங்கள் அமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.

கலெக்டர் உத்தரவு

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, செயற்பொறியாளர் செல்வக்குமார், கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் மற்றும் பொறியாளர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story