விவசாயி உள்பட 2 பேர் மீது சரமாரி தாக்குதல்
திட்டக்குடி அருகே விவசாயி உள்பட 2 பேர் மீது சரமாரி தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திட்டக்குடி,
திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பார்த்திபன் (வயது 28). விவசாயி. இவருக்கும் கோழியூரை சேர்ந்த பெரியசாமி மகள் வினோதினி (23) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 14-5-2023 முதல் இவருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வினோதினி, அவரது தாய் சித்ரா, மகன்கள் விக்னேஷ், விஜய், இவர்களது நண்பர்கள் ஆனந்தராஜ், முருகானந்தம், செல்வா(23), முருகேசன், ராஜா(20), பாலமுருகன்(20), சிரஞ்சீவி(21) மற்றும் உறவினர் நீதி மன்னன் ஆகியோர் பார்த்திபன் வீட்டிற்கு சென்றனர். அப்போது வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து வினோதியின் சீர்வரிசை பொருட்களை எடுத்து ஒரு வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பார்த்திபன் என்னுடைய வீட்டில் உள்ள பொருட்களை ஏன் எடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள்? என்று கேட்டு்ள்ளார். அப்போது பார்த்திபனுக்கும், வினோதினி தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வினோதினி தரப்பை சேர்ந்த ஆனந்தராஜ், முருகானந்தம், செல்வா, முருகேசன், ராஜா, பாலமுருகன், சிரஞ்சிவி ஆகியோர் ஒன்று சேர்ந்து பார்த்திபனை கட்டையாலும், பீர்பாட்டிலாலூம் சரமாரியாக தாக்கினர்.
இதை தடுக்க வந்த பார்த்திபனின் உறவினர் வடிவேலையும் அவர்கள் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த இருவரும் திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர், பார்த்திபன் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வினோதினி உள்ளிட்ட 12 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து செல்வா, ராஜா, பாலமுருகன், சிரஞ்சீவி ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.