விசைப்படகு தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்


விசைப்படகு தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 15 Oct 2023 12:30 AM IST (Updated: 15 Oct 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் விசைப்படகு தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மீன்பிடிக்க கடலுக்கு செல்கிறார்கள்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 260 விசைப்படகுகள் உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்கள் உள்ளனர். விசைப்படகு உரிமையாளர்கள் வாரத்தில் ஒருநாள் விடுமுறை எனவும், மீதமுள்ள 6 நாட்களில் சுழற்சி முறையில் விசைப்படகுகளை இயக்குவது எனவும் முடிவு செய்தனர். இதன்படி ஒரு படகு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க செல்லும் நிலை இருந்து வருகிறது. அனைத்து நாட்களும், அனைத்து படகுகளும் மீன் பிடிக்க செல்லும்போது, போதுமான மீன்கள் கிடைக்காமல் திரும்பி வருகின்றனர். இதனால் வீண் செலவுகள் ஏற்படுவதாக கூறி உரிமையாளர்கள் இந்த முடிவினை எடுத்தனர்.

ஆனால் விசைப்படகு தொழிலாளர்கள் வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்க சென்றால்தான் எங்களது குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்காது. எனவே 6 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என வலியுறுத்தி கடந்த 10-ந் தேதி முதல் விசைப்படகு மீனவ தொழிலாளர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இந்நிலையில் நேற்று 5-வது நாளாக இந்த போராட்டம் நடந்தது. தொடர்ந்து விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்பதாக விசைப்படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர். எனவே பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மீன்பிடி தொழிலாளர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து நாளை (திங்கட்கிழமை) முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றனர்.


Next Story