ரூ.5.90 கோடி செலவில் நடைபெற்று வந்த பி.ஏ.பி. வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நிறுத்தம்-மீண்டும் பணிகளை தொடங்க விவசாயிகள் வலியுறுத்தல்


ரூ.5.90 கோடி செலவில் நடைபெற்று வந்த பி.ஏ.பி. வாய்க்கால் சீரமைப்பு பணிகள்  நிறுத்தம்-மீண்டும் பணிகளை தொடங்க விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 July 2023 12:30 AM IST (Updated: 1 July 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

ரூ.5.90 கோடி செலவில் நடைபெற்று வந்த பி.ஏ.பி. வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அதனால் மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

நெகமம்

ரூ.5.90 கோடி செலவில் நடைபெற்று வந்த பி.ஏ.பி. வாய்க்கால் சீரமைப்பு பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளன. அதனால் மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளார்கள்.

சீரமைப்பு பணி

பி.ஏ.பி திட்டத்தில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. பரம்பிக்குளம் அணையில் இருந்து பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு வழியாக சர்க்கார்பதிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு, அங்கு மின் உற்பத்தி செய்த பின்னர் காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. திருமூர்த்தி அணையில் இருந்து நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு பிரதான கால்வாய் வழியாக பாசன நீர் கொண்டு சென்று கிளை மற்றும் பகிர்மான கால்வாய்கள் வழியாக பாசனத்துக்கு விநியோகம் செய்யப்படுகிறது. அதில் திருமூர்த்தி அணை முதல் வெள்ளக்கோவில் வரை 126 கிலோமீட்டர் தூரத்திற்கு பரம்பிக்குளம் பிரதான கால்வாய் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் பாசன நீர் விரயம் ஆனது. மேலும் கால்வாய் கரை பகுதிகளில் உடைப்பு ஏற்படுவதால் கடைமடைக்கு தண்ணீர் முறையாக செல்வதில்லை. இதை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இந்தநிலையில் பிரதான கால்வாயை சீரமைக்க அரசு ரூ.5.90 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது உடுமலை கோட்டம் மற்றும் பொள்ளாச்சி கோட்ட பகுதிகளில், பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு சேதமடைந்த கால்வாய்களை சீரமைக்கும் பணி தொடங்கியது.

ஒரு மாதமாக பணிகள் நிறுத்தம்

பொள்ளாச்சி கோட்டத்திற்குட்பட்ட ஆவலப்பம்பட்டி, கொண்டேகவுண்டன்பாளையம் பகுதியின் பிரதான கால்வாயில், 32 -வது கிலோமீட்டர் முதல் 36-வது கிலோமீட்டர் வரை மொத்தம் நான்கு கிலோ மீட்டருக்கு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால் கடந்த ஒரு மாத காலமாக பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சீரமைப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் திறப்புக்கு முன்பு சீரமைப்பு பணிகள் முடிக்கப்படுமா? என்ற அச்சம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது.

பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்

இது குறித்து ஆவலப்பம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:- பி.ஏ.பி. பிரதான வாய்க்காலில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் தண்ணீர் திறக்கப்படும். இந்நிலையில் பி.ஏ.பி வாய்க்காலில் கடந்த 2 மாதங்களாக பணிகள் நடைபெறாமல் உள்ளது. வாய்க்கால் பகுதியில் பல்வேறு இடங்களில் சிமெண்ட் கற்களை பெயர்த்து வெறும் மண் தெரியும் நிலையில் உள்ளது. மெயின் வாய்க்காலில் சைஸ்கற்கள் பதித்து சிமெண்ட் கலவை பூசி வந்தால் தான் தண்ணீர் விரயம் ஆகாமல் கடைமடை வரை தண்ணீர் சீராக செல்லும், தற்போது இந்த பகுதியில் எதிர்பார்த்த அளவில் பருவமழையும் பெய்யவில்லை, கிணறுகளில் உள்ள தண்ணீரும் வற்றி வரும் நிலையில் உள்ளது. மேலும் தேங்காய்க்கு உரிய விலையும் கிடைக்காமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பி.ஏ.பி வாய்க்காலை பார்வையிட்டு நிறுத்தப்பட்ட பணிகளை விரைந்து முடித்து ஆகஸ்டு மாதத்தில் தண்ணீர் திறந்து விடுவதற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story