தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை... அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிக்கு கத்திக்குத்து - வியாபாரி கைது


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் விற்பனை... அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிக்கு கத்திக்குத்து - வியாபாரி கைது
x
சென்னை

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்தவர் கேசவன் (வயது 34). இவர், பெருநகர சென்னை மாநகராட்சி, அண்ணா நகர் மண்டலம், 105-வது வார்டில் சுகாதார ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கேசவன், நேற்று காலை அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் சோதனை மேற்கொண்டார்.

அப்போது அங்கு வறுகடலை கடை நடத்தி வந்த அதே பகுதியை சேர்ந்த தர்மர் (63) என்பவர் கடையில் சோதனை நடத்தியபோது கிலோ கணக்கில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது. கேசவன் அவற்றை பறிமுதல் செய்து ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த தர்மர் மற்றும் அவரது குடும்பத்தினர் கேசவனிடம் தகராறு செய்தனர். அப்போது தர்மர், கத்தியால் கேசவனை குத்தியதாக தெரிகிறது.. எதிர்பாராதவிதமாக கேசவன் அணிந்திருந்த அடையாள அட்டையில் கத்தி குத்தியதில் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் அவர் உயிர் தப்பினார். பின்னர் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற கேசவன், இதுபற்றி அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story