வங்கியின் ஏல நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்கலாம் எனக்கூறி ஐ.டி. நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி


வங்கியின் ஏல நகைகளை வாங்கி அதிக விலைக்கு விற்கலாம் எனக்கூறி ஐ.டி. நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி
x

வங்கியின் ஏலம் விடப்படும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்கலாம் என ஆசை வார்த்தை கூறி ஐ.டி.நிறுவன ஊழியரிடம் ரூ.4 லட்சம் மோசடி செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.

சென்னை

ஆசை வார்த்தை கூறி...

சென்னை வடபழனி சாலிகிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 39). ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்த ஊர் காரைக்குடி. இவரது நண்பர் காரைக்குடியை சேர்ந்த சங்கர் (38) ஆவார். இவர்கள் இருவரும் ஒன்றாக படித்துள்ளனர். தற்போது சென்னையில் தங்கி வரும் சங்கரும், கார்த்திகேயனும் சமீபத்தில் சந்தித்துள்ளனர். அப்போது வங்கிகளில் தங்க நகை ஏலம் விடுவதை குறைந்த விலையில் எடுத்து விற்றால் அதிக லாபம் கிடைக்கும் என்று சங்கர் கார்த்திகேயனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

போலீசில் புகார்

சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் மூலம் பணத்தை கொடுத்து குறைந்த பணத்தில் தங்க நகையை ஏலம் எடுத்து விற்பனை செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று சங்கர் நம்ப வைத்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய கார்த்திகேயன் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அழைத்துச் சென்று ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்தை சங்கரிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்று கொண்ட சங்கர் திடீரென தலைமறைவானார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கார்த்திகேயன், இதுகுறித்து வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மோசடி நண்பர் கைது

இதையடுத்து சைதாப்பேட்டை பகுதியில் சங்கர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் தனிப்படை போலீசார் சைதாப்பேட்டையில் பதுங்கி இருந்த சங்கரை கைது செய்து வடக்கு கடற்கரை காவல் நிலையம் அழைத்து வந்து அவரிடம் இருந்து ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்தனர். மேலும் ஒன்றாக படித்த நண்பனையே நம்ப வைத்து மோசடி செய்தது உண்மை என்று தெரியவந்தது. இவரை கைது செய்த வடக்கு கடற்கரை போலீசார் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபோல் சங்கர் பலரிடம் மோசடி ஈடுபட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story