குளச்சல் அருகே 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை


குளச்சல் அருகே 3 கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை
x
தினத்தந்தி 22 Oct 2023 12:15 AM IST (Updated: 22 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குளச்சல் அருகே ஒரே நாள் இரவில் 3 கோவில்களில் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

குளச்சல் அருகே உள்ள தெற்கு பண்டாரவிளையில் அறநிலையத்துறைக்கு சொந்தமான காவு தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதுபோல நேற்று முன்தினம் பூசாரி பூஜைகளை முடித்து விட்டு கோவிலை பூட்டிவிட்டு சென்றார்.

இந்தநிலையில் நேற்று காலையில் அந்த வழியாக சென்ற பொதுமக்கள் கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறநிலையத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அறநிலையத்துறை ஆய்வாளர் செல்வி மற்றும் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது யாரோ மர்ம நபர்கள் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குளச்சல் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

இதுபோல் குளச்சல் அருகே உள்ள சீம்பிளிவிளையில் தனியாருக்கு சொந்தமான வெள்ளிப்பிள்ளையார் இசக்கியம்மன் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்குள்ள இரும்பு உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.

மேலும் கூத்தாவிளை பட்டத்திவிளையில் இசக்கியம்மன் கோவிலில் இருந்த உண்டியலையும் மர்ம நபர்கள் உடைத்து காணிக்கை பணத்தை எடுத்து சென்றுள்ளனர்.

இந்த 3 கோவில்களிலும் ஒரே கும்பல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுதொடர்பாக குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவில்களில் உண்டியல் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஒரே நாளில் அடுத்தடுத்து 3 கோவில்களில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்ைக பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story