பிளஸ்-2 முடித்த 687 மாணவர்கள் உயர்கல்வி கற்க வங்கி கடன் உதவி-கலெக்டர் தகவல்
பிளஸ்-2 முடித்த 687 மாணவர்கள் உயர்கல்வி கற்க வங்கி கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்
பிளஸ்-2 முடித்த 687 மாணவர்கள் உயர்கல்வி கற்க வங்கி கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.
உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நான் முதல்வன்-கல்லூரி கனவு திட்டத்தின்கீழ் பிளஸ்-2 படித்த மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலெக்டர் பேசியதாவது:-
பள்ளி படிப்பை முடித்து கல்லூரி செல்ல முடியாத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டி பட்டப்படிப்பை தொடர்ந்திட நான்முதல்வன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும் தங்களது லட்சியத்தில் முதல்வனாக வேண்டும். அதற்கு கல்லூரி படிப்பு ஒரு ஏணியாக உயர்த்தும் என்பதை அறிந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி உள்ளார். முன்பு இது போன்ற ஆலோசனை, வழிகாட்டுதல் இல்லாமல் பொருளாதார சூழலால் பலர் பள்ளி படிப்போடு இருந்தனர்.
கடனுதவி
இப்போது அந்த தடைகளை தாண்டி ஒவ்வொருவரின் கல்லூரி படிப்பு கனவை இந்த திட்டம் நனவாக்கி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ்-2 முடித்த 687 பேர் உயர்கல்வி கற்க முடியாத நிலையில் இருப்பதை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டி, கல்வி கட்டணம் செலுத்த வங்கி கடனுதவி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் மதுக்குமார், வருவாய் கோட்டாட்சியர் கோபு, ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் அன்னம்மாள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சத்யநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.