வங்கியில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்


வங்கியில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
x

புதுக்கோட்டை அருகே வங்கியில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் லாக்கரில் இருந்த ஆவணங்கள்-நகைகள், பணம் தப்பின.

புதுக்கோட்டை

வங்கியில் தீ விபத்து

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடியில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 7-ந் தேதி அதிகாரிகள் பணிகளை முடித்துவிட்டு வங்கியை மூடிவிட்டு சென்றனர். இந்நிலையில் இன்று அதிகாலை வங்கியில் இருந்து புகை வெளிவந்தது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு துறை, மணமேல்குடி போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்த ஜெகதாப்பட்டினம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வங்கி கதவை திறந்து உள்ளே சென்ற தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இந்த தீ விபத்தில் வங்கியிலிருந்த கம்ப்யூட்டர்கள், பிரிண்டர், ஏ.சி. உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின.

வாடிக்கையாளர்கள் திரண்டனர்

லாக்கரில் இருந்த பணம், நகைகள், முக்கியமான ஆவணங்கள் தப்பின. மேலும் இந்த தீ விபத்து மின்கசிவால் ஏற்பட்டதாக போலீசார் கூறினார்கள். வங்கியில் தீ விபத்து ஏற்பட்டவுடன் வாடிக்கையாளர்கள் தங்களது நகைகள் எரிந்து போய் இருக்கலாம் என கருதி வங்கி முன்பு கூடினர். இதையடுத்து வங்கி அதிகாரிகள், நகைகள் அனைத்தும் பத்திரமாக உள்ளது என கூறினர்.

மேலும் மணமேல்குடி வங்கி கிளையில் கணக்கு வைத்திருப்பவர்கள் வரவு, செலவு கணக்குகளை அருகில் இருக்கும் மீமிசல் வங்கி கிளையில் தொடரலாம் என தெரிவிக்கப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த தீ விபத்தால் மணமேல்குடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story