குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5-வது நாளாக தடை


குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5-வது நாளாக தடை
x
தினத்தந்தி 14 July 2022 6:45 PM GMT (Updated: 14 July 2022 6:46 PM GMT)

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக குறைந்தது. தொடர்ந்து வெள்ளம் நீடிப்பதால் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5-வது நாளாக தடை நீடிக்கிறது.

தர்மபுரி

பென்னாகரம்:

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக குறைந்தது. தொடர்ந்து வெள்ளம் நீடிப்பதால் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5-வது நாளாக தடை நீடிக்கிறது.

நீர்வரத்து குறைந்தது

கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது மழையின் அளவு குறைந்ததால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 90 ஆயிரம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக குறைய தொடங்கியது. அதன்படி நேற்று காலை 8 மணி நிலவரப்படி வினாடிக்கு 80 ஆயிரம் கன அடியாக குறைந்தது. மேலும் குறைந்து மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 70 ஆயிரம் கன அடியாக குறைந்தது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீரை காவிரி நுழைவிடமான தமிழக- கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து வருகின்றனர்

தீவிர கண்காணிப்பு

ஒகேனக்கல்லுக்கு அவ்வப்போது நீர்வரத்து அதிகரித்தும் குறைந்தும் வருவதால் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. மேலும் காவிரி ஆற்றில் கரைகளை தொட்டவாறு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது

இதன் காரணமாக அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், மீட்பு படையினர் ஊட்டமலை, நாடார் கொட்டாய், சத்திரம், ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

மேலும் வருவாய்த்துறையினர் காவிரி ஆற்றில் வரும் தண்ணீரை கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து 5-வது நாளாக தடை நீடிக்கிறது.


Related Tags :
Next Story