பாமகவின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை - அமைச்சர் பொன்முடி
பாமகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை,
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டது. இதில் தி.மு.க. 1 லட்சத்து 24 ஆயிரத்து 053 வாக்குகளும், பா.ம.க. 56 ஆயிரத்து 296 வாக்குகளும் மற்றும் நாம் தமிழர் கட்சி 10 ஆயிரத்து 602 வாக்குகளும் பெற்றுள்ளன. இதன்படி தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.
இந்த நிலையில், தேர்தல் முடிவுகள் குறித்து அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருப்பதாவது;
பாமகவுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள். பாமகவின் பொய் பிரசாரம் மக்களிடம் எடுபடவில்லை. பாமகவுக்கு விக்கிரவாண்டி மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள். அதிமுக தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் அவர்களுக்கும் சேர்ந்துதான் தோல்வி கிடைத்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் பேச்சை அதிமுகவினரே கேட்பதில்லை என்பதற்கு விக்கிரவாண்டி தேர்தலே உதாரணம்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் காரணம். 3 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களால் வெற்றி பெற்றிருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.