சக்தி மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்


சக்தி மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
x

ஆண்டிமடம் சக்தி மாரியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அண்ணங்கார குப்பம் வன்னியர் தெருவில் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. மேலும் மகாபாரத கதைகள் கூறப்பட்டு, சாமி வீதியுலா நடைபெற்று வந்தது.

இந்தநிலையில் நேற்று 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆண்டிமடம் அண்ணங்கார குப்பம் குளத்தில் இருந்து பால்குடம் எடுத்துக்கொண்டு கவரப்பாளையம், சூனாபுரி ஆகிய தெருக்கள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் சக்தி மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கோவில்வாசலில் இருந்து அண்ணங்கார குப்பம் கடைவீதி வரை 100 மீட்டர் அளவிற்கு கல் உப்பினை தரையில் பரப்பி வைத்திருந்தனர். கோவில் பூசாரி முருகன் அதன் மீது கையில் தீச்சட்டி ஏந்திக்கொண்டு அங்க பிரதட்சனை செய்தார். பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என பக்தி கோஷங்களை எழுப்பினர். இதில் ஆண்டிமடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இரவு அம்மன் வீதியுலா நடைபெற்றது. அப்போது பக்தர்கள் வீடுகள் தோறும் மா விளக்கு போட்டு தேங்காய் உடைத்து தீபாராதனை காண்பித்து அம்மனை தரிசித்தனர்.


Next Story