பாலாலய பூஜை
சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் பாலாலய பூஜை நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி வேங்கைபட்டி சாலையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சித்தர் முத்துவடுகநாதர் கோவில் உள்ளது. தற்போது இந்த கோவிலில் கும்பாபிஷேகத்திற்காக பாலாலய விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சிறப்பு யாக வேள்வி பூஜைகள் நடைபெற்றன.
சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் பரம்பரை வேளார் வம்சாவளி சிவாச்சாரியார்கள் 9 பேர் சிறப்பு யாக வேள்வியை நடத்தினர். இதில் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் சுகன்யா மற்றும் செயல் அலுவலர் பாலாஜி மற்றும் சித்தர் முத்துவடுகேசர் வம்சாவளி வாரிசுதாரர் ராம சுப்பிரமணியன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, திருப்பணி குழு தலைவரும் வணிகர் நல சங்க தலைவருமான வாசு மற்றும், திருப்பணி குழு செயலாளர் திருமாறன், பொருளாளர் கண்ணன், துணைத்தலைவர் சரவணன், சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பு வேள்விகள் நடைபெற்றன.
வேள்வி முடிந்ததும் புனித நீர் அடங்கிய கலசத்தை சித்தர் முத்து வடுகேச நாதர் வாரிசுதாரர்கள், கோவில் பூஜகர்கள், மற்றும் சிங்கம்புணரி கிராம முக்கியஸ்தர்கள் சுமந்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்தனர். பின்னர் சித்தர் முத்துவடுகநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் புனித நீர் அடங்கிய கலசத்தில் இருந்து புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டு பாலாலய விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து விரைவில் திருப்பணிகள் நடைபெற உள்ளன.