கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் பாலாலய பூஜை
ஆண்டிப்பட்டி அருகே கதலி நரசிங்க பெருமாள் கோவிலில் பாலாலய பூஜை நடந்தது.
ஆண்டிப்பட்டி அருகே ஜம்புலிபுத்தூரில் பழமை வாய்ந்த கதலி நரசிங்கபெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று கோவில் வளாகத்தில் பாலாலய பூஜை நடைபெற்றது. இதில் கோவிலில் 3 இடங்களில் தீர்த்த குடங்கள் வைத்து பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மேலும் பலகைகளில் மூலவர் கதலி நரசிங்க பெருமாள், ஸ்ரீமன் நாராயணன், செங்கமலத்தாயார் மற்றும் பரிவார தெய்வங்களின் படங்கள் வரையப்பட்டு அறைகளில் வைக்கப்பட்டது. பூஜிக்கப்பட்ட குடங்களில் தெய்வ சக்தி நிலை நிறுத்தப்பட்டு அறையில் வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூலவர் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்தும் திரைகளால் மூடப்பட்டது. மூலஸ்தானங்களில் இருந்து உற்சவமூர்த்திகள் பூஜிக்கப்பட்ட அறையில் கொண்டு வந்து வைக்கப்பட்டனர். கும்பாபிஷேகம் நடைபெறும் வரை உற்சவ மூர்த்திகளுக்கு மட்டுமே அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளது என்று கோவில் குருக்கள் கூறினர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செயல்அலுவலர் ஹரிஷ் குமார் மற்றும் ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.