பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
x

குமரியில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரியில் பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

பக்ரீத் பண்டிகை

தியாகத்திருநாள் என்று அழைக்கப்படும் முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையால் கடந்த 2 ஆண்டுகளாக பக்ரீத் பண்டிகை கூட்டு தொழுகை நடைபெறாமல் இருந்தது. தற்போது அரசு பல்வேறு தளர்வுகளுடன் அனுமதி வழங்கியதை தொடர்ந்து நேற்று பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கோட்டார் இமாம் அல் மஸ்ஜிதுல் அஷ்ரப் பள்ளிவாசல், வடசேரி பள்ளிவாசல், இளங்கடை பள்ளிவாசல் மற்றும் கிள்ளியூர், குளச்சல், திட்டுவிளை, மார்த்தாண்டம், குலசேகரம், களியக்காவிளை பகுதிகளில் உள்ள பள்ளிவாசல்களில் நேற்று காலையில் முஸ்லிம்கள் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடத்தினர். இதில் குழந்தைகள், பெண்கள் உட்பட ஏராளமானோர் புத்தாடை அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்று ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

தக்கலை

தக்கலை, திருவிதாங்கோடு, மணலிக்கரை, மேக்காமண்டபம் பள்ளிவாசல்களில் நேற்று முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். திருவிதாங்கோட்டில் உள்ள ஒரு மைதானத்தில் பல்வேறு பகுதியில் இருந்து வந்த முஸ்லிம்கள் பெரும்திரளாக கலந்துகொண்டு தொழுகை நடத்தினர். இதில் பெரியவர்கள், சிறியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவியும், கைகுலுக்கியும் பண்டிகை வாழ்த்தை பரிமாறி கொண்டனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் மீராசா ஆண்டவர் குத்பா பள்ளிவாசல் உள்ளது. இங்கு பக்ரீத் தொழுகையை 9-ந் தேதி நடத்த வேண்டும் என ஒரு பிரிவினரும், நேற்று நடத்த வேண்டும் என மற்றொரு பிரிவினரும் போலீசாரிடம் அனுமதி கேட்டனர்.

இதுதொடர்பாக நாகர்கோவிலில் உள்ள அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அலுவலகத்தில் சமாதான பேச்சு வார்த்தை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி அகஸ்தீஸ்வரம் தாசில்தார் சேகர் தலைமையில் கன்னியாகுமரி துணைபோலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகுமாரன், வருவாய் ஆய்வாளர் சுதர்சன், கிராம நிர்வாக அலுவலர் பரத் அருண் ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சிறப்பு தொழுகை

இதில் கன்னியாகுமரி முஸ்லிம் ஜமாத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஒரே நாளில் ஒற்றுமையாக பக்ரீத் தொழுகை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நேற்று காலையில் கன்னியாகுமரி பள்ளிவாசல் முன்பு உள்ள திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடைபெற்றது. கடந்த 35 ஆண்டுகளுக்கு பின்னர் இருதரப்பு முஸ்லிம்களும் கன்னியாகுமரியில் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பக்ரீத் தொழுகை நடத்தி பண்டிகையை கொண்டாடினர்.


Next Story