பொக்லைன் கவிழ்ந்து விபத்து; வாலிபர் பலி
பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் வாலிபர் பலியானார். நண்பரை பார்க்க வந்தபோது துயர சம்பவம் நடந்தது.
வாலிபர் பலி
திண்டுக்கல் மாவட்டம், பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்தவர் ராஜன்பாபு. அவருடைய மகன் சுபாஷ் (வயது 22). பாலிடெக்னிக் படித்துவிட்டு வேலை தேடி வந்தார். பாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த கண்ணுசாமி மகன் கார்த்திக்ராஜா (22). பொக்லைன் எந்திர டிரைவர். இவர்கள் 2 பேரும் நண்பர்கள்.
கார்த்திக்ராஜா நேற்று நெய்க்காரப்பட்டி பேரூராட்சி குப்பை கிடங்கில் பொக்லைன் எந்திரம் மூலம் குப்பைகளை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவரை பார்ப்பதற்கு சுபாஷ் அங்கு சென்றார்.
அப்போது சுபாஷ், கார்த்திக்ராஜாவுடன் பொக்லைன் எந்திரத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. கார்த்திக்ராஜா பொக்லைன் எந்திரத்தை குப்பை கொட்டியிருந்த மேட்டு பகுதியில் ஏற்றும்போது திடீரென பொக்லைன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.
இதில் பொக்லைன் எந்திரத்தின் அடியில் சுபாஷ் சிக்கியதால் படுகாயம் அடைந்தார். சிறிது நேரத்தில் சுபாஷ் பரிதாபமாக இறந்தார். கார்த்திக்ராஜா லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.
போலீஸ் விசாரணை
இந்த சம்பவம் குறித்து கார்த்திக்ராஜா உடனடியாக பழனி தாலுகா போலீஸ் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் கிரேன் மூலம் பொக்லைன் எந்திரத்தை அகற்றி சுபாசின் உடலை கைப்பற்றினர். தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நண்பரை பார்க்க சென்றபோது, பொக்லைன் எந்திரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் பழனியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.