கழிவுகள் சாலையோரத்தில் கொட்டுவதால் துர்நாற்றம்


கழிவுகள் சாலையோரத்தில் கொட்டுவதால் துர்நாற்றம்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 11 Nov 2022 11:10 PM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில் வடிகாலில் தூர்வாரப்பட்ட கழிவுகள் சாலையோரத்தில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் வடிகாலில் தூர்வாரப்பட்ட கழிவுகள் சாலையோரத்தில் கொட்டுவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதாள சாக்கடையில் அடைப்பு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை உள்பட 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி மயிலாடுதுறை பகுதியில் நேற்று பெய்த தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ெரயில்வே ஜங்ஷன் சாலை, காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது. மேலும் பல இடங்களில் பாதாள சாக்கடையின் ஆள்நுழைவு தொட்டி வழியாக மழைநீர் உள் நுழைந்ததால் அடைப்பு ஏற்பட்டது.

சாலையோரத்தில் கொட்டப்பட்ட கழிவுகள்

இதன் காரணமாக பல்வேறு இடங்களில் ஆள்நுழைவு தொட்டி வழியாக பாதாள சாக்கடை கழிவு நீருடன், மழைநீர் கலந்து வெளியேறியது. மழை நீர் தேங்காதவாறு நகராட்சி சார்பில் வடிகால்கள் சீரமைக்கப்பட்டது. கச்சேரி சாலையில் உள்ள வடிகாலில் தூர்வாரப்பட்டு அதில் உள்ள மண் கலந்த கழிவுகள் அனைத்தும் சாலையோரத்தில் கொட்டி வைக்கப்பட்டன.

அந்த கழிவுகள் அப்புறப்படுத்தப்படாததால் மழையில் கரைந்து மீண்டும் வடிகாலுக்கு சென்றது. மேலும் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அந்த பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.

அகற்ற கோரிக்கை

இதேபோல நகரில் பல இடங்களில் வடிகால்கள் தூர்வாரப்பட்டு அதன் கழிவுகள் சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளன. கொட்டப்பட்ட கழிவுகள் மீண்டும் வடிகாலில் விழுந்து அடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.எனவே வடிகாலில் இருந்து தூர்வாரப்பட்ட கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story