பாளையங்கோட்டையில் அடுத்தடுத்து விபத்து: சுகாதார அதிகாரி-ஆம்புலன்ஸ் உரிமையாளர் பலி


பாளையங்கோட்டையில் அடுத்தடுத்து நடந்த விபத்தில் சுகாதார அதிகாரி, ஆம்புலன்ஸ் உரிமையாளர் பலியானார்கள்.

திருநெல்வேலி

சுகாதார ஆய்வாளர்

நெல்லை பாளையங்கோட்டை பஸ்நிலையம் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் தெய்வநாயகம் (வயது 58). சுகாதார ஆய்வாளரான இவர் சமாதானபுரத்தில் உள்ள மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலையில் தெய்வநாயகம் தனது மோட்டார் சைக்கிளில் புதிய பஸ் நிலையத்திற்கு புறப்பட்டார்.

பாளையங்கோட்டை குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதியில் சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தெய்வநாயகம் ரெயில்வே தண்டவாளத்தில் விழுந்து உயிர் இழந்தார்.

போலீசார் விரைந்தனர்

இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால், ரெயில்வே தண்டவாளத்தில் உடல் கிடந்ததால் ரெயில் மோதி இறந்தாரா? என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தினர். இதனால் அவரது உடல் அங்கிருந்து எடுக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீசாரும் வந்தனர். போக்குவரத்தை சரிசெய்வதற்காக அவரது உடலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆம்புலன்ஸ் உரிமையாளர் பலி

இதற்காக வண்ணார்பேட்டை எட்டுத்தொகை தெருவை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உரிமையாளரான ஜெயசீலன் (69) என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் தெற்கு பைபாஸ் வழியாக குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதிக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது எதிரே வந்த கன்டெய்னர் லாரி, ஆம்புலன்ஸ் மீது மோதியது. இதில் ஜெயசீலன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார்.

இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் மற்றொரு ஆம்புலன்சை வரவழைத்து அவரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஜெயசீலன் பரிதாபமாக உயிர் இழந்தார்.

விசாரணை

ெதாடர்ந்து சுகாதார ஆய்வாளர் தெய்வநாயகம் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

அடுத்தடுத்து நடந்த இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story