அய்யா வைகுண்டர் அவதார தினவிழா


அய்யா வைகுண்டர் அவதார தினவிழா
x
தினத்தந்தி 5 March 2023 12:15 AM IST (Updated: 5 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தினவிழா நேற்று நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

191-வது அவதார தினவிழா

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் 191-வது அவதார தினவிழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு தாலாட்டு பாடுதல், பள்ளி உணர்த்தல் அபயம் பாடுதல் நடந்தது. பின்னர் காலை 6.50 மணிக்கு சூரிய உதயத்தில் கடல் பதமிட்டு, அவதாரபதிக்கு அய்யா வைகுண்டர் அழைத்து வரப்பட்டார்.

அப்போது கடற்கரையில் கூடியிருந்த திரளான பக்தர்கள் 'அய்யா சிவ சிவ அரகரா அரகரா' என்று பக்தி கோஷங்களை முழங்கியவாறு அய்யா வைகுண்டரை வழிபட்டனர். தொடர்ந்து அவதார தினவிழா பணிவிடை நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதர்மம், பிரசாதம் வழங்கப்பட்டது.

அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி

முன்னதாக நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகபடிப்பு, அன்னதர்மம் நடந்தது. மதியம் உச்சிபடிப்பு, பணிவிடை, அன்னதர்மமும், இரவு 7 மணிக்கு பணிவிடையை தொடர்ந்து அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

பின்னர் திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி பேராசிரியை ஸ்ரீமதி தியாகராஜன், பாம்பன்குளம் நந்தினி ஆகியோர் திருஏடு வாசித்தனர்.

பட்டிமன்றம்

அகிலத்திரட்டில் வாழ்வியல் கருத்து மற்றும் அய்யா வைகுண்டரின் அவதார மகிமை என்ற தலைப்பில் அகிலத்திரட்டு அம்மானை கருத்துரை நடந்தது. பின்னர் செந்தூர் பதியில் உதித்த அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டில் அதிகம் வலியுறுத்துவது அன்பே, பொறுமையே, தர்மமே என்ற தலைப்பில் அய்யாவழி இன்னிசை பட்டிமன்றம் நடந்தது. தொடர்ந்து இரவு சிவச்சந்திரரின் அய்யாவின் அருளிசை வழிபாடு நடந்தது.

விழாவில் சபாநாயகர் அப்பாவு, திருச்செந்தூர் சப்-கோர்ட்டு நீதிபதி வஷித்குமார், சுப்பிரமணிய சுவாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், நாங்குநேரி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள்சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணைத்தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், சட்ட ஆலோசகர் வக்கீல் சந்திரசேகரன், இணை தலைவர்கள் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால் நாடார், இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், வரதராஜபெருமாள், நிர்வாகக்குழு உறுப்பினர் ஆதிநாராயணன், மோகன்குமாரராஜா உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழா ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை நிர்வாகிகள் செய்து இருந்தனர்.


Next Story