சமரச மைய விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம்
சமரச மைய விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்கம்
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட சமரச மையம் மற்றும் திருப்பூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வளாகத்தில் சமரச மைய விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் தலைமை தாங்கி கொடியசைத்து வாகனத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 4 நாட்களுக்கு சமரச மையம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீதித்துறை சார்பில் நடத்தப்பட உள்ளது.
திருப்பூர் மத்திய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம், காலேஜ் ரோடு ஆகிய பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வாகனத்தின் மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை சுமூகமான முறையிலும், விரைவாகவும் தீர்வு காணும் வகையில் சமரச மையம் செயல்படுகிறது என்று முதன்மை மாவட்ட நீதிபதி விளக்கி கூறினார்.
இதில் மகளிர் நீதிமன்ற நீதிபதி பாலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார், குடும்ப நல நீதிபதி சுகந்தி, கூடுதல் சார்பு நீதிபதி மேகலா மைதிலி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, நீதித்துறை நடுவர்கள் பாரதி பிரபா, முருகேசன், கார்த்திகேயன், ஆதியான், வக்கீல் சங்க தலைவர்கள் பழனிசாமி, சுந்தரேஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.