விருத்தாசலம் அரசு பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வு பேரணி
விருத்தாசலம் அரசு பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பேரிடர் மீட்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு விருத்தாசலம் சப்-கலெக்டர் பழனி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாசில்தார் ஜெயசீலன், சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதையடுத்து பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவர்கள் கையில் ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்று வந்தனர். முன்னதாக பள்ளியில் விருத்தாசலம் தீயணைப்பு நிலைய அலுவலர் மணி தலைமையில் போக்குவரத்து நிலைய அலுவலர் மணிவேல் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள், மழைக்காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது, தீ விபத்து மற்றும் மழைக்காலங்களில் பேரிடரில் சிக்கிக் கொண்டவர்களை காப்பாற்றுவது, விபத்துகளில் யாரேனும் சிக்கிக் கொண்டால் அவர்களை எப்படி மீட்பது? என்பது குறித்து மாணவர்களுக்கு செயல்விளக்க பயிற்சி அளித்தனர். இதில் வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்தகுமார், பிரேமா மற்றும் ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.