குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்


குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
x

குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல் தொடர்பாக பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கல்வித்துறை உத்தரவு.

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது ஒவ்வொரு கல்வி ஆண்டின் முதல் வாரத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, மனநலம், குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்தல், தன்னம்பிக்கையை வளர்த்தல், போதை பொருட்களுக்கு அடிமையாதலை தடுத்தல், தன்சுத்தம் பேணுதல் போன்றவை தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, பள்ளி மாணவர்களின் உடல், மனநலனை காக்க மருத்துவ குழுக்களை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உரிய பரிசோதனைகளை செய்யவும், இளைஞர் நீதிச்சட்டம் போக்சோ சட்டம், சாலை பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் போன்ற அரசு நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகளில் நடத்த அரசு உறுதி பூண்டு இருக்கிறது. அதன்படி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் வருகிற 26-ந்தேதி விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்கும் நிகழ்வும், 27-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத்துறை, போலீஸ் துறைகளுடன் இணைந்து விழிப்புணர்வு வாரத்தை செயல்படுத்தவும் கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

இந்த நாட்களில் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த கட்டுரை, ஓவியம், வினாடி வினா மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கல்வித்துறை கூறியிருக்கிறது.


Next Story