பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
வாணியம்பாடியில் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
வாணியம்பாடி
வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஓட்டல், கடைகள், பேக்கரிகள் மற்றும் சிறு உணவக உரிமையாளர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு தீமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்று மற்றும் உரிமம் வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
வாணியம்பாடி பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்ற இந்த முகாமில், வாணியம்பாடி உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) பழனிச்சாமி கலந்துக்கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஓட்டல், பேக்கரிகள் மற்றும் சிறு உணவக உரிமையாளர்களிடம், 'எக்காரணத்தைக் கொண்டும் அரசு தடை செய்துள்ள ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது.
அவ்வாறு பயன்படுத்துவதனால் நாட்டிற்கும் நமது உடல் நலத்திற்கும் அதிகளவு தீமை ஏற்படுகிறது. இதன் காரணமாகவே அரசு ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்துள்ளது.
விதிகளை மீறி பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உணவகங்களில் பயன்படுத்தும் எண்ணெய்யை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
டீக்கடைகளில் கட்டாயமாக பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் டீ பார்சல் வழங்கக் கூடாது. உணவு பொருட்களில் அதிக வர்ணம் சேர்க்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட கடை உரிமையாளர்களுக்கு உணவு பாதுகாப்பு பதிவு சான்று மற்றும் உரிமங்களை வழங்கினார்.