தீயணைப்பு துறை சார்பில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்


தீயணைப்பு துறை சார்பில் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்
x

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் பட்டாசு கடை உரிமையாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர்

தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி(திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுவது பற்றி பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை திருவள்ளூர் மாவட்ட அலுவலர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். உதவி மாவட்ட அலுவலர் வில்சன் ராஜ்குமார், நிலை அலுவலர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அப்போது தீயணைப்பு அதிகாரிகள் பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு அரசின் அனுமதி பெற்று தான் பட்டாசு கடைகளை வைக்க வேண்டும். பட்டாசு கடைகள் முன்பு தீயணைக்கும் கருவியை கண்டிப்பாக வைக்க வேண்டும். இங்கே புகைப்பிடிக்க கூடாது என விழிப்புணர்வு வாசகம் கடையின் முன்பு கண்டிப்பாக வைக்க வேண்டும். எதிர்பாராத தீவிபத்து ஏற்பட நேர்ந்தால் அது குறித்து உடனடியாக அருகில் உள்ள தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தமிழக அரசின் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடைபிடித்து விபத்தில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருவள்ளூர், கடம்பத்தூர், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், திருப்பாச்சூர், பேரம்பாக்கம், மப்பேடு போன்ற சுற்றுவட்டார பகுதியில் இருந்து பட்டாசு கடை உரிமையாளர்கள் கலந்துக்கொண்டனர்.


Next Story