போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
தேனியில் போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம், நடைபயண ஊர்வலம் நடந்தது.
தேனியில் போதை இல்லாத தமிழகம் என்ற தலைப்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம், நடைபயண ஊர்வலம் நடந்தது.அரண்மனைப்புதூர் விலக்கில் இருந்து தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அதே பகுதியில் இருந்து நடைபயண ஊர்வலத்தையும் கலெக்டர் தொடங்கி வைத்து ஊர்வலமாக சென்றார்.
அவருடன் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன், உத்தமபாளையம் போலீஸ் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி, தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பார்த்திபன் மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் பலர் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் மதுரை சாலை, பங்களாமேடு, நேரு சிலை சிக்னல், பெரியகுளம் சாலை வழியாக நகராட்சி அலுவலகம் வரை சென்று, மீண்டும் பெரியகுளம் சாலை, பழைய பஸ் நிலையம் வழியாக அரண்மனைப்புதூர் விலக்கில் நிறைவடைந்தது.
பின்னர், கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லூரி வளாகத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார். அப்போது அங்குள்ள விளையாட்டு மைதானத்தில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாசகம் வடிவில் மாணவ, மாணவிகள் அணிவகுத்து நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.