கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு
கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மணிகண்டம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம் மற்றும் ஒரு அறக்கட்டளை சார்பில் நாகமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள அங்கன்வாடி மையத்தில் கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நாகமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர் கல்பனா கலந்து கொண்டு பேசினார். கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டன. முன்னதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராபின் வரவேற்றார். முடிவில் அங்கன்வாடி மைய ஆசிரியை உமா நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டம்
*பதவி உயர்வில் உள்ள பாகுபாட்டை நீக்கக்கோரி தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தினர் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் அன்புசேகரன் தலைமை தாங்கினார். மாநில இணை செயலாளர் ஜெயசந்திரன், மகளிர் அணி செயலாளர் நிர்மலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் பாலசந்தர் நன்றி கூறினார்.
*தமிழகத்தில் புதிய மருத்துவ கல்லூரி தொடங்க மத்திய அரசு தடை விதித்ததை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன்தாஸ் முன்னிலை வகித்தார். மாணவர் அணி தலைவர் அறிவுச்சுடர் உள்பட பலர் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
*திருச்சி முக்கொம்பு சுற்றுலாத்தலத்தில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர், போலீசாரை குண்டர் சட்டத்தில் கைது செய்யக்கோரி சாமானிய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சைனி தலைமை தாங்கினார். கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். பின்னர், அவர்கள் இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ரத்ததான நாள் நிகழ்ச்சி
*திருச்சி அரசு மருத்துவமனையில் தேசிய தன்னார்வ ரத்ததான நாள் நிகழ்ச்சி நடந்தது. டீன் நேரு தலைமை தாங்கி கடந்த ஆண்டு ரத்த தான முகாம் ஏற்பாடு செய்து கொடுத்த முகாம் ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் மருத்துவ கண்காணிப்பாளர் அருண்ராஜ் மற்றும் அதிகாரிகள், அனைத்து ரத்த வங்கி ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
உபா சட்டத்தை ரத்து செய்ய கோரிக்கை
*என்.ஐ.ஏ. அமைப்பை கலைக்கக்கோரியும், உபா சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநகர செயற்குழு உறுப்பினர் நிர்மலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செழியன், மாநகர செயலாளர் கார்க்கி, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில பொதுச்செயலாளர் கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.