வேடசந்தூர் அருகே வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு
வேடசந்தூர் அருகே வடமாநில தொழிலாளர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவிய வதந்தியால் அவர்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் தனியார் நூற்பாலை மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு போலீசாருக்கு, மாவட்ட சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.
அதன்பேரில் வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று வேடசந்தூர் அருகே கிரியம்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில், விடுதியில் தங்கி வேலை பார்க்கும் 200-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவை நம்பி யாரும் அச்சமடைய வேண்டாம். வடமாநில தொழிலாளர்களுக்கு இங்கு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. உதவி தேவைப்பட்டால் அவசர எண் 100ஐ அழைக்கவும். வேடசந்தூர் பகுதியில் நூற்பாலை நிர்வாகம் மற்றும் போலீசார் உறுதுணையாக இருப்பார்கள் என்று நம்பிக்கையூட்டினர்.
இந்த நிகழ்ச்சியில் நூற்பாலை பொது மேலாளர் சரவணன், தொழிலாளர் மேற்பார்வையாளர் பிரகாஷ், பொறுப்பாளர் வீரமணி, விடுதி காப்பாளர் சுப்பிரமணி, நிர்வாக விசாரணை அதிகாரி பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.