பட்டாசு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம்
வெம்பக்கோட்டையில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
வெம்பக்கோட்டையில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமை தாங்கினார். சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் முன்னிலை வகித்தார். முகாமில் பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பட்டாசு கடை விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் தொடர் வெடிவிபத்தில் அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களுடைய குடும்பத்தினர் நிலைமை பரிதாபமாக உள்ளது. ஆகையால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பட்டாசு உற்பத்தியில் கவனம் செலுத்துவது போல தொழிலாளர்கள் பாதுகாப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களுடைய வலி, வேதனைகளை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உணர வேண்டும். பட்டாசு கடைகளிலும் அரசு அறிவித்தவாறு விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். மேலும் போலீசார் பட்டாசு தொழிலுக்கு பாதுகாப்பாக இருப்போம். ஆகையால் பட்டாசு ஆலையில் சட்டத்திற்கு உட்பட்டு பட்டாசுகளை தயாரிக்க வேண்டும். பட்டாசு விதிமுறை மீறல் ஏற்பட்டால் அரசு அறிவித்தவாறு நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து இல்லாத தீபாவளியாக கொண்டாட அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என இன்ஸ்பெக்டர் சங்கர் பேசினார்.