வேளாண் அடுக்கு திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்
ஊத்துமலையில் வேளாண் அடுக்கு திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
ஆலங்குளம்:
ஆலங்குளம் வட்டார வேளாண் அடுக்கு திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் ஊத்துமலை கிராமத்தில் நடந்தது. தென்காசி வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்மலர் தலைமை தாங்கி பேசினார். அப்போது, அவர் கூறுகையில், வேளாண் அடுக்கு திட்டமானது அனைத்து விவசாயிகளுக்கும் தனிப்பட்ட அடையாள அட்டை வழங்கவும், விவசாயிகள் எந்த பயிர்களை எப்போது பயிரிட வேண்டும், எப்படி அதிக மகசூல் பெறுவது குறித்து ஆலோசனைகள் வழங்கவும், மண் ஆரோக்கியம் மற்றும் பயிர் ஆரோக்கியத்தை கண்காணித்தல் போன்ற விவரங்களை இந்த திட்டத்தின் மூலம் டிஜிட்டல் முறையில் பெற முடியும். எனவே விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், தொலைபேசி எண், பட்டா நகல் மற்றும் வங்கி விவரம் ஆகியவற்றை ஊத்துமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் கொடுத்து இந்த திட்டத்தில் பதிவு செய்ய கேட்டுக் கொள்கிறேன் என்றார். மேலும் ஊத்துமலை வேளாண்மை விரிவாக்க மையத்தில் உதவி வேளாண்மை அலுவலர்கள் பணியினை ஆய்வு செய்தார்.
ஆலங்குளம் வேளாண்ைம உதவி இயக்குனர் அறிவழகன் வேளாண் அடுக்கு திட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்.
முகாமில் துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி விதை அலுவலர் மாரியப்பன், உதவி வேளாண்மை அலுவலர்கள் செந்தில்குமார், கணேசன், மணிகண்டன் மற்றும் சுமன், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர் மாயாண்டி, ஊத்துமலை பகுதி விவசாயிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விவசாயிகள் கண்ணையா, கோபால் ஆகியோர் செய்து இருந்தனர்.