கலைநிகழ்ச்சிகள் மூலம் மது ஒழிப்பு விழிப்புணர்வு
சிவகிரியில் கலைநிகழ்ச்சிகள் மூலம் மது ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சிவகிரி:
மது மற்றும் சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்தை கடந்த 10 நாட்களுக்கு முன்பு தென்காசியில் மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்து வந்தது. இறுதி நாளான நேற்று சிவகிரி பஸ் நிலையம் அருகில் வைத்து, தென்காசி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, சங்கரன்கோவில் கலைவாணர் கலைக்குழு சார்பில் 'மது என்கிற அரக்கனை ஒழிப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. சிவகிரி பேரூராட்சி நிர்வாக அலுவலர் வெங்கடகோபு தொடங்கி வைத்தார். வருவாய் ஆய்வாளர் சுந்தரி முன்னிலை வகித்தார்.
கரகாட்டம், தப்பாட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன், கிராம உதவியாளர் அழகுராசா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிவகிரி அருகே ராயகிரி பஸ்நிலையம் அருகிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதை ராயகிரி கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் ெதாடங்கி வைத்தார். சுகாதார பணி மேற்பார்வையாளர் முத்துச்செல்வம், கிராம உதவியாளர் மலைக்கனி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.