பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு
பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
தமிழக அரசு உத்தரவிற்கிணங்க தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான அம்பேத்கர் மற்றும் கருணாநிதி ஆகியோர்களின் கருத்துக்களையும், சமூக சிந்தனைகளையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில், அவர்களின் பிறந்தநாளையொட்டி அரியலூர் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா பேச்சு போட்டியில் முதலிடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், 2-வது இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரமும், 3-ம் இடம் பிடித்தவர்களுக்கு தலா 2 ஆயிரமும், அரசு பள்ளிகளை சேர்ந்த 4 மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு பரிசாக தலா ரூ.2 ஆயிரமும் மற்றும் சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டினார்.
2021-22-ம் ஆண்டு 1,330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்து பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட 2 மாணவர்களுக்கும் குறள் பரிசு தொகையாக தலா ரூ.15 ஆயிரமும் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார். மேலும் வயது முதிர்ந்த தமிழறிஞர் உதவித்தொகையை பெற்று வரும் ஒருவருக்கு இலவச பஸ் பயண சலுகை அரசாணையை வழங்கினார். அப்போது மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் சித்ரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.