மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உதவியவர்களுக்கு விருது - கலெக்டர் தகவல்


மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உதவியவர்களுக்கு விருது - கலெக்டர் தகவல்
x

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக உதவியவர்கள் மற்றும் சேவை புரிந்த நிறுவனங்களை கவுரவிக்கும் விதமாக அரசு விருது வழங்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிபவர்கள் மற்றும் நிறுவனங்களைத் தேர்வு குழு மூலம் தேர்வு செய்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழக அரசால் விருதுகள் வழங்கப்படுகிறது.

15-08-2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்காக கீழ்காணும் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அரும்பணியாற்றிய சிறந்த மாவட்ட கலெக்டருக்கு தங்கப்பதக்கம் ரூ.25 ஆயிரம் ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு தங்கப்பதக்கம் ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலை வாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூக பணியாளருக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்ப படிவங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்று வருகிற 28-06-2023 தேதிக்குள் அங்கு நேரில் சென்று சமர்பிக்குமாறும், இல்லாவிட்டால் http://awards.tn.gov.in என்ற வலைதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story